frlwf; fw;f
கசடறக்கற்பது?
தெளிவாகப் பிழையில்லாமல் கற்பதே கசடறக் கற்பது. இசை எல்லோரிடமும் புதைந்துள்ள ஒரு ஆத்மீக அனுபவம் என்பதே உண்மை. இருந்தாலும் ஒரு சிலருக்குத்தான் அதை முழுமையாகப் பயில வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்கள் சிறந்த கலைஞர்களிடம் சிறப்பாகப் பயில முடிகிறது. நிறையப்பேர் பொறுமை இல்லாமல் நடுவில் குருவை விட்டுச் செல்லும்படி நேர்கிறது. அப்படி நேரும்போது கற்கும் இசை அரைகுறையாகிறது. ஒரு மாணாக்கர் இசையைக் கசடறக்கற்க இசையின் அடிப்படைகள் மிக முக்கியம். இதைத்தான் இசைஞானிகள், விற்பன்னர்கள் சொன்னார்கள், செய்தார்கள். அவ்வழியில் நாம் சென்ன்றால்தான் இசையில் முழுமை பெற இயலும். நமக்கு சுலபமாக வருகிறது என்று நினைத்து அரைகுறையாகக் கற்கக்கூடாது. ஒரு சில கலைஞர்களே, அப்பியாசம் செய்யும் நிலைகளைத்தாண்டிப் பிரகாசிக்க முடிகிறது. நிறைய மாணாக்கர்கள் அரைகுறை நிலையிலேயே மேற்படிப்புக்கு பல்கலைக்கழகம் வரை வந்துவிடுகிறார்கள், திண்டாடுகிறார்கள் என்றுணர்ந்தே 1989 ல் பிருஹத்வனி ஆரம்பிக்கப்பட்டது.
2003ம் ஆண்டு, ‘லால்குடி வருடம்’ என்று லால்குடி ஸ்ரீ ஜயராமன் அவர்களின் சிறப்பைக் கொண்டாடும் வருடமாக பிருஹத்வனி அறிவித்த போது அழைப்பிற்கிணங்கி இசைஞானி இளைய ராஜா அவர்கள் பிருஹத்வனிக்கு வருகை தந்தார். அவருடைய பேச்சு அற்புதமாக இருந்தது. அவர் கற்றல் என்பதைப்பற்றி கல்லில் பொறிக்கும் வண்ணமான அருமையான கருத்துக்களை யோசிக்காமல் என் எதிரிலேயே உடனடியாக எழுதித்தந்தார். அதைக்கண்டு நான் வியந்தேன். எப்படி இப்படி ‘நறுக்குத்தெரித்த மாதிரி’ எழுத முடிந்தது என்று மேலும் மேலும் வியப்பில் ஆழ்ந்தேன். அதை ‘லால்குடி மலரில்’ வெளியிட்டேன். அதை வாசகருக்காக, மாணாக்கர்களுக்காக கீழே கொடுத்திருக்கிறேன். படித்துப் பயனடைக.
"கற்றல்" என்பதைப்பற்றி ஓர் அருமையான கட்டுரை. மறக்க முடியாத நினைவுகளில் இளையராஜா அவர்களின் பிருஹத்வனி வருகை ஒன்று. அவர் எண்ணங்களும் செயல்களும் மிகப் பெரிது. அதற்குத் தலை வணங்குகிறேன்.
இசைஞானி இளையராஜா
இசை அனுபவம் சிலருக்கு உள்ளிருந்து சுலபமாக வெளி வருகிறது. ஆனாலும் அதைத் தெளிவாக உணற, புரிந்து கொள்ள, வெளிப்படுத்த சரியான வழியில் அப்பியசிக்க வேண்டும். சரியான வழியென்றால் எது? எந்த வழி அப்பழுக்கு இல்லாமல் தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இசையைக் கொடுக்க முடிகிறதோ அதுவே சரியான வழி. ‘தங்கு தடை’ இல்லாமல் படிப்படியாக முன்னேற்றத்தை மாணாக்கருக்கு எந்த வழி கொடுக்க முடிகிறதோ அதுவே சரியான வழி. அவர் அவர் நிலைக்குத் தகுந்த மாதிரி கொடுத்தாலும் முடிவாக எல்லோரும் கேட்டு ஆனந்தப்படும்படி எந்த வழி கொடுக்கிறதோ அதுவே சரியான வழி.
கர்னாடக இசைக்கு அடிப்படை சரளி, ஜண்டை, அலங்காரம் போன்ற பயிற்சிகளோடு பொதுவாக ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தெளிவாக, தடங்கல் இல்லாமல் அப்பியசித்தால்தான் அடுத்த படிகளில் ஏறமுடியும். சரியான வழியில் அப்பியாசிக்காவிட்டால் பின்னர் திரும்பத் திரும்பப் படிகளில் ஏறி இறங்க வேண்டி வரும். எதற்காக இம்மாதிரியான வழிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்பதை ஒவொவொரு கட்டத்திலும் நன்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கும் முறைதான் கசடறக் கற்பதற்குச் சரியான வழி. சொல்வதை உடனடியாகப் புரிந்து செயல் படாத மாணாக்கருக்கு தகுந்த மாதிரியான பயிற்சிகளை உண்டாக்கும் தகுதியையும் ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். தெளிவுறக் கற்காத மாணாக்கர்கள் அப்பியாசங்களை முடித்து விட்டோம் என்று மேலும் மேலும் செல்லுதல் கூடாது. அடிப்படையில் வேண்டிய நேரம் சிலவிட்டால்தான் இசையில் நல்ல தேர்ச்சி பெறமுடியும். நன்கு கற்றுவிட்டோம் என்று நினைத்தால், கற்றதில், ஒரு சிறு பகுதியோ அல்லது பெரிய பகுதியோ, எட்டுத்தடவை சிறு பிழைகூட இல்லாமல் பாடவோ வாசிக்கவோ முடிய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து தடங்கல் இல்லாமல் வாசிக்கும் வரை அப்பியசிக்க வேண்டும். இதற்கு ஆசிரியருக்கும், மாணக்கருக்கும் பொறுமை நிறைய வேண்டும். இப்படிப்பட்ட கற்கும் முறையில் ‘நான் ஒரு விற்பன்னன் இல்லை’ என்று நினைப்பவர்கூட நல்ல விற்பன்னராக முடியும். இதுவே உண்மை.