Muha;r;rpahy; vspik
“இசையில் ஆராய்ச்சி செய்ய என்ன இருக்கிறது?” என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நிறைய இருக்கிறது. சில அற்புதமான பண்டிதர்கள் இசையை ஆராய்ந்து இசை உலகத்துக்குப் பயன் தரும்படி செய்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களைப்பற்றி பலருக்குத்தெரியாது. தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இல்லை. ஒரு சிலரே இசையைப்பற்றி ஆராய விரும்பகிறார்கள். அவர்கள் ஆராய்ச்சியே இசையின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம்.
ஆரய்ச்சியில் பல வகைகள் உண்டு. பழைய இசை இலக்கியங்களை ஆராய்வது, இசை இலக்கணங்களை ஆராய்வது, பாட்டுக்களை ஆராய்வது, பாடகர்களை ஆராய்வது போன்ற பல பிரிவுகள் உண்டு. முந்திய காலத்தில் இசை ஆராய்வதை ஒரு தொழிலாகக் கருதவில்லை. மற்ற தொழில்களில் இருப்பவர்கூட இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டு பெயர் வாங்கியிருக்கிறார்கள். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள்.
பிருஹத்வனியில் இசை ஆராய்ச்சி, நன்கு பாடுவதற்கும், வாசிப்பதற்கும், நன்கு கற்பதற்கும், கற்பிப்பதற்கும், எளிமையான வழிகளில் எல்லோருக்கும் இசை கிடைக்கும்படி செய்வதற்கும், இசையின் தாக்கம், அடிப்படைப் பள்ளிக் கல்வி முதலாக எங்கெல்லாம் இருக்கிறது என்று தெரிந்து செயல் படுவதற்கும், நாட்டிய, நாடக, இலக்கியங்களுக்கும் இசைக்கும் உள்ள இணைப்பை உறுதிப்படுத்தி ஒன்றோடொன்று இணந்து செயல்பட ஏதுவான அடிப்படைகளை வலிமைப்படுத்துவதற்கும், உலக இசைக்கும் கர்னாடக இசைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்து ஒன்றோடு ஒன்று இணந்தும் செயல்படவும், அதே சமயத்தில் இசைகளின் பாரம்பர்யங்களின் பிரத்தியேகத் தன்மை இழக்காமல் இருக்கும் வழி வகைகளைப் புரிந்து செயல்படுவதற்கும், இசையே மருந்தாகப் பாவிப்பதற்குமாகிய வெவ்வேறு வகைகளில் பயன்படுகிறது.