top of page

vd; ,irg; gazk;

என் வீணையின் அடித்தளம்

ஒன்பதாவது வீணைப் பரம்பரையச்சேர்ந்த ஒருவன் நான் என்று அறிந்து கொள்வதற்கு முன்பே என் இசைப்பயணம் ஆரம்பித்திருக்கிறது. வீட்டில் எப்போதும் வீணையின் நாதம்தான். அது எங்கள் தாயாரிடமிருந்து பிறந்து எல்லோரையும் ஆக்ரமித்துக்கொண்டிருந்தது. என் தாயார் லக்ஷ்மி அம்மாள் எப்போதும் யாருக்காகவாவது வீணை கற்பித்துக் கொண்டிருப்பார். அது எங்கள் உடம்போடு, உயிரோடு கலந்து  ஒன்றாகியிருந்தது. எப்படி என் உணர்வோடு வீணை இசை சொந்தம் கொண்டாடியது என்பதற்கு என் அனுபவதில் ஒரு நிகழ்ச்சியை இங்கே கூறுகிறேன்.

 

நீலாம்பரியின் தழும்பு

எனக்கு அப்போது ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். ஒரு நாள் எனக்கு ஜுரம். இரவு நேரம். உடம்பு அனலாகக் கொதிக்கிறது. என் தாயார் வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். தாயார் மடியில், குடத்திற்குப் பக்கத்தில் தலைவைத்துப் படுத்திருந்தேன். நீலாம்பரி ராகம் வாசித்தார். பின்னர் முத்துஸ்வாமி தீக்ஷதரின் அம்பா நீலாயதாக்ஷி பாடிக்கொண்டே வாசித்தார்கள். நான் அதை நிறையத் தடவைகள் வாசித்துக் கேட்டிருக்கிறேன். பல்லவி முடிப்பதற்குள்ளேயே தூக்கம் வந்து விடும். அதனால் என்றுமே அதை முழுக்கக் கேட்டது இல்லை. அன்று அனுபவம் சிறிது வேறுமாதிரியாக இருந்தது. குடத்திற்கும் குடுக்கைக்கும் நடுவே தாயார் மடியில் படுத்திருந்தேன். காதை குடத்தோடு நெருக்கி வைத்து வீணை நாதத்தை அனுபவித்தேன். அந்த அனுபவம் எனக்கு மிகப் புதிதாக இருந்தது. என்ன நாதம்! மிகச் செழுமையாக இருந்தது! வாசித்துக்கொண்டே பாடிக் கொண்டிருந்தார்கள் என் தாயார். நான் பறப்பது போல் உணர்ந்தேன். அறையின் உட்கூரையின் பக்கத்தில் மிதப்பது போல் உணர்ந்தேன். ஆனால் சிறிது சிறிதாக மெதுவாகக் கீழே நழுவிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ சிரிப்பொலியும் வீட்டிற்குள்ளே கற்கள் விழுவதைப் போன்ற சத்தமும் கேட்டேன். பயந்து விழுந்து பின் வாசலுக்கு ஓடினேன். அங்கே போக்கிரிப் பையன்கள் நான்கைந்து பேர் என்னைத் திரும்பிப் பார்த்துக் கத்திக் கொண்டே என் வீட்டிலிருந்து ஓடிக்கொண்டிருந்தனர். கேலி செய்து கொண்டே திரும்பி மறுபடியும் எங்கள் வீட்டுப் பக்கம் வந்தார்கள். எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கத்தினேன். திரும்பத் தாயார் மடியில் வந்து படுத்துக் கொண்டு அழுதுகொண்டே உறங்கிவிட்டேன். மறு நாள் விடிந்தது. அவர்கள் செய்தது என் மனதில் ஆழப்பதிந்திருந்தது. அதையே இன்னம் நினத்திருந்தேன். மதியம் 12 மணிக்கு வீட்டுக்கு வெளியே சென்று நின்று கொண்டேன். அதையே நினைத்து அவர்களுக்கு சரியானதொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கையை வீசிக்கொண்டே படியிலிருந்து கீழே விழுந்தேன். கீழே கூரியதொரு கல் என் நெற்றியில் பாய்ந்தது. ரத்த வெள்ளமானது. நினவிழந்தேன். கண் விழிக்கும் போது தலையில் பெரியதொரு கட்டுடன் மதுரை பெரிய  இருந்தேன். கல் நெற்றியைப் பிளந்திருக்கிறது. அதன் தழும்பு இன்றும் என் அடையாளச் சின்னமாக என் பாஸ்போர்ட்டில் குறித்து வைத்திருக்கிறார்கள்! அதுவே நீலாம்பரியின் தழும்பு.

எனக்கு ஏன் அப்படிக் கோபம் வரவேண்டும்? கல்லெரிந்தார்கள் என்பதனால் இல்லை. எனக்கு நன்றாகத் தெரியும். கர்னாடக இசையை அவமதித்தார்கள் என்பதனால்தான். அது என் ஆழ் மனதில் அகலாத பெரிய புண்ணை ஏற்படுத்தியதோடு என் தலையிலும் அகலாத வடுவை ஏற்படுத்திவிட்டது என்பதே உண்மை. நீலாம்பரி என் உடலானது. என் நினைவானது. இந்த நினைவோடு பின்னர் என் இரு குழ்ந்தைகளுக்கும், என் பேரன் பேத்திக்கும் இதைப் பாடி என் தாயாரைப்போல் அவர்கள் உணர்வோடு கலந்திருக்கிறேன். இப்படித்தான் ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு வகையில் மறக்க முடியாத குழந்தை சங்கீத அனுபவங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். சிறு வயதிலிருந்தே சங்கீதக் குடும்பங்களில் சங்கீதத்தை உணர்வோடு சேர்த்து விடுகிறார்கள். என்னை அறியாமலேயே இவ்வுணர்வு என்னிடம் வளர்ந்து வந்திருக்கிறது. நன்கு வளர்ந்த பிறகு இவ்வுணர்வே இன்னொரு பெரிய வடுவை என்னுள் ஏற்படுத்தியது. அதைப் பின் கூறுகிறேன்.

 

வீணை என்னைத் தள்ளுகிறது

என் தாயார் வீணை சொல்லிக்கொடுப்பதைப் பார்த்துக் கேட்டு வீணை வாசிக்க ஆரம்பித்தேன். என் ஆர்வத்தைக் கண்டு முறையாக என் தாயார் வீணை ஆரம்பித்தார்கள். எல்லோரையும் போல்தான் நானும் வாசித்தேன் என்று நினத்தேன். ஆனால் எனக்கு என் தாயாரின் சிஷ்யைகள் பெரு மதிப்புக்கொடுத்தார்கள். பெருமையாக இருந்தது. அவர்களோடு வாசிப்பேன். அவர்கள் சந்தேகங்கள் கேட்டால் தீர்த்து வைப்பேன். என் தாயாரும் அதை ரஸிப்பார்கள். சில சமயங்களில் வீட்டிற்கு யாராவது வந்தால் என் தாயார் அவர்களுக்கு என்னை வீணை வாசிக்கச் சொல்வார். வெட்கப்படுவேன். வாசிக்க மறுப்பேன். “ரொம்ப பீத்திக்காதம்மா” என்று சொல்லிவிட்டு இடத்தை விட்டு நழுவி விடுவேன். ஆனால் தனியாக நானாக வாசிப்பேன். நான் என் தாயார் மாதிரி வாசிக்க முடியவில்லை என்ற எண்ணமே என்னை அழுத்திக் கொண்டிருந்தது. என் தாயாரின் குரலைக்கேட்டு மயங்கியிருக்கிறேன். அவர்கள் குரலில் அப்படியொரு இனிமை, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மாதிரி! அது வீணைக்குரல். கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் தாயாரின் குரல் என் அண்ணன், வெங்கிடராமனின் மகள் சாந்தியும், என் அக்காள் மகள் ஸ்ரீவித்தியாவும் என் மகள் ஹம்சாவும்  ஸ்வீகரித்துக்கொண்டிருப்பதை கண்டு நான் வியந்தேன். (எந்த இசைப்பரம்பரையிலும் இல்லாமலே எங்கோ வளரும் குடும்பங்களில் மலரும் குரல்கள் என்னை மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. “இவர்கள் பாடினால் எப்படி இருக்கும்” என்று எண்ணி ஏங்கியிருக்கிறேன்.)

என் சிறு வயதில் என் அக்காள், ராஜேஸ்வரி வாசித்து அதிகம் கேட்டதில்லை. அவர்களைச் சிறு வயதிலேயே என் சின்னத் தாத்தா சாம்பசிவய்யரிடம் வீண கற்க அனுப்பி வைத்திருந்தார், என் தாயார். எப்பவாவது மதுரை வந்தபோது அவள் வாசிப்பு என் தாயாரைவிட ஏனோ வெகு நன்றாக இருந்தது. மெய் மறந்து போவேன். ஏக்கத்தோடு நின்று கேட்டுக் கொண்டிருப்பேன். ஏன் என் சின்னத் தாத்தாவிடம் என்னை அனுப்பவில்லை என்று எண்ணுவேன். நச்சரித்து லீவிற்கு நானும் பெரம்பூருக்குப் போவேன். அப்போது அவர் அங்கே இருந்தார். அங்கே என் அனுபவம் முற்றும் வேறு. நிறைய வித்வான்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். பெரம்பூர் சபா செகரெட்டரி, சேதுராம அய்யர், என் தாத்தாவிற்கு முன்னால் கோவிலுக்குச் சென்று ஸ்வாமி சன்னிதியில் துண்டை இடுப்பில் கட்டிகொண்டு நிற்பதுபோல் நிற்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எனக்கும் என் தாத்தாவிடம் பக்தியுடன் கலந்ததொரு உணர்ச்சி இருந்துதே தவிர தாத்தா என்ற உரிமையுடன் கலந்த பாசம் இருந்ததாக நினைவில்லை. அவரோடு பெரம்பூர் சபாவில் நடக்கும் கச்சேரிகளுக்குப் போவேன். முதன் முதலில் அங்கே ஆலத்தூர் பிரதேர்ஸ் கச்சேரி கேட்டேன். பொறி தரிப்பதுபோல் பாட்டு. கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன்னும், முடிந்தபிறகும் என் தாத்தாவை அவர்கள் நமஸ்காரம் செய்தார்கள். அதே பயபக்தி! கச்சேரிக்கு மறு நாள் வீட்டுக்கு வந்து பல்லவிகளைப் பாடிக் காண்பித்தார்கள். எனக்கு பல்லவிகள் என்று தெரியாது. என் பாட்டியிடம் கேட்ட போது சொன்னார்கள் தெரிந்து கொண்டேன்.

அங்கே நான் உணர்ந்தது பக்தி சூழ்ந்த ஒரு சங்கீதானுபவம்.  அங்கிருந்தபோது மாலை வேளைகளில் எனக்குத் தாத்தா வேடிக்கைப் பாட்டுகளைச் சொல்லிக் கொடுப்பார். ‘கத்தரிக்காய் கூடை கொண்டாடி’ என்றதொரு பல்லவி, ‘சித்திரை, வைகாசி’ என்ற மாதங்களின் பெயர்களுக்கு ஓர் பாட்டு, ‘சாப்புட்டுப்புட்டுக் கையலம்பி, சகுனம் பாத்து வண்டிகட்டி’ என்றதொரு பாட்டு, ‘ஸா க பா  கா ப ஸா’ என்றதொரு நோட்டுஸ்வரம் போன்ற பாட்டுக்களயே சொல்லிக் கொடுப்பார். என் அக்காவிற்குச் சொல்லிக் கொடுத்திருக்கிற மாதிரி சொல்லிக் கொடுக்க மாட்டாரா என்று நினைப்பேன். ஆனால் என் தகுதி அவ்வளவுதான் போலும் என்று நினத்து சமாதானப்ப்டுத்திக் கொள்வேன்.

bottom of page