top of page

tPiz NgRfpwJ

Thatha vina.png

மேலே காணும் வீணை, காரைக்குடி சாம்பசிவ அய்யர் உபயோகித்தது. 1958 ம் வருடம் ஒரு நாள் மௌன குருவாய் சைகையால் என்னைக் கூப்பிட்டார். உட்காரச்சொன்னார். கண்ணீர் மல்க இதை எனக்கு அளித்தார். பரம்பரை வளர விதைத்த வித்து என்று உள் மனது கூறியது. ஆனால் நம்பமுடியவில்லை! எனக்கு அப்போது வயது 13.

- காரைக்குடி சாம்பசிவய்யர் சுப்பிரமணியன்

நானே கடவுள்

வீணையும் ஸரஸ்வதியும் ஞானத்திற்கு இரு பெயர்கள். வீணைக்கு ஒரு புனிதமான இடம் உண்டு. இது ஒரு முழுமையானதொரு வாத்தியம். வீணையே கடவுள் என்ற நம் கலாசாரத்தில் விளைந்த நம்பிக்கை வேறூன்றியது. வீணைக்கு இந்திய தேசீய இசைக் கருவி என்றதொரு சிறந்த இடமும் இருக்கிறது. உலகம் முழுதும் தமிழ் பேசும் எவரும் இவ்விசைக்கருவியை மிகச் சிறப்பாக மதிக்கிறார்கள். இதற்கு ஸரஸ்வதி வீணை என்று முழுப்பெயர்.

இதன் புனிதத்தை உலகுக்கு உணர்த்திய, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், சங்கராசார்யா, முத்துஸ்வாமி தீக்ஷிதர் போன்ற ஆத்மஞானம் பெற்ற, தெய்வாம்சம் பொருந்திய மஹான்கள் சிலர். இதன் புனிதத்தில் தோய்ந்து புனித வாழ்க்கையை நடத்தியவர்கள் சிலர். இதன் புனிதத்தினால் புனிதமானவர் பலர்.

இந்தியா குடியரசான வருடத்தில் (1952) ‘ஜனாதிபதி விருது’ வாங்கிய நான்கு தலை சிறந்த வித்வான்களில், ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த, காரைக்குடி வீணை சாம்பசிவ அய்யர் அவர்கள் ஒருவர். பரிசு வாங்க டெல்லி சென்றால், தான் நிதம் செய்யும் கடவுள் பூஜைக்கு தடை ஏற்படும் என்ற காரணத்தினால் பரிசு வாங்க டெல்லி போக மறுத்து விட்டார்! இது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அன்று ஆல் இந்தியா ரேடியோவின் தலைவராக இருந்த திரு ஜி.டி சாஸ்திரி அவர்கள் அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக அவரிடம் உறுதி கூறி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். போகும் வழியில் சில இடங்களில் இறங்கிப் பூஜைகள் செய்துவிட்டே டெல்லி சென்றிருக்கிறார்.

வீணைக்குத் தான் கொடுத்த மரியாதையினால் வணங்கத் தக்கதொரு இடத்தை அடைந்திருந்தவர் காரைக்குடி சாம்பசிவ அய்யர் அவர்கள். இவரின் மூத்த சகோதரர், காரைக்குடி சுப்பராமய்யர் அவர்களும் இவரும் சேர்ந்து வீணையை உபாசனை செய்து ‘காரைக்குடி சகோதரர்கள்’ என்று பெரும் புகழோடு வாழ்ந்திருந்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியிலும் நிலாவில் இரவு முழுதும் வீணை சாதகம் செய்து அதிகாலையில் குளித்து பூஜை செய்து தங்கள் பௌர்ணமி நாதோபாசனையை பக்தியுடன் முடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வீணையினால் தன் வாழ்க்கையில் வணங்கத்தக்க ஓர் பெரிய இடத்தை அடைந்த மற்றொருவர் ஸ்ரீமதி தனம்மாள் அவர்கள். வீணைக்கு மேலும் பெருமை சேர்த்த உயர்ந்த பழைய கலைஞர்கள் சிலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மைசூர் ஸ்ரீசேஷண்ணா-சுப்பண்ணா, வீணா சாமண்ணா, வெங்கடரமணதாஸ், அவர்கள். இவ்வரிசையில் பிரகாசித்த பல கலைஞர்களில் ஸ்ரீ திருவனந்தபுரம் கல்யாணகிருஷ்ண பாகவதர், வீணை பாலசந்தர், மைசூர் துரைஸ்வாமி அய்யங்கார், ஈமனி சங்கர சாஸ்த்ரி, திருமதி கற்பகம் ஸ்வாமிநாதன், ரங்கனாயகி ராஜகோபாலன், ராஜேஸ்வரி பத்மனாபன், பிச்சுமணி அய்யர், மைசூர் விச்வேச்வரன், ஜி. என் தண்டபாணி அய்யர், ராகவன் மற்றும் பலர்.

சிறு வயதிலிருந்தே வீணையில் பிரகாசித்தவரில் குறிப்பிடத்தக்கவர், திருமதி ‘பேபி காயத்ரி’ என்று முன்பு பிரபலமாக அழைக்கப்பட்ட, இன்று தமிழ் இசைப் பல்கலைகழகதின் துணைவேந்தராக இருக்கும் திருமதி இ. காயத்ரி அவர்கள்.

திருமதி, ஆர். எஸ். ஜெயலக்ஷ்மி, பி. கண்ணன், ஜெயந்தி குமரேஷ், ராஜேஷ் வைத்யா, மற்றும் பல கலஞர்கள் இன்று வீணையில் விற்பன்னராக விளங்குகிறார்கள்.

இத்தகவல்கள் முழுமை அடையவில்லை. நிறைய இளம் கலைஞர்கள் நன்றாக வாசிக்கிறார்கள். நன்றாக வாசிப்பவரே இக்கலையுலகில் மனத் திருப்தியோடு, நிறைவோடு கலைச் சேவை செய்து தன்னையும் கலை விரும்பிகளையும் மகிழ்ச்சியொடு வைத்திருக்க முடியும்.

ஆனால் வீணை இசையை எந்தப்புகழுக்கும் ஆசைப்படாமல் அதனுடைய புனிதத்தைக் காத்து, எல்லோருக்கும் கற்பித்து இதனை வளர்த்த ஆசார்யார்கள் பலர். அவர்களில் சிலரைப்பற்றி சில மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நன்கு அறிந்து தொடர்ந்து வீணை கற்றுக் கொண்டும், ஆராய்ச்சி செய்தும், புத்தகமாக எழுதியும், நொடேஷனாக எழுதியும், ஒலி நாடாவாகவும் வெளியிட்டிருக்கிறர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், புரஃபஸர் டாக்டர் டேவிட் ரெக் (Prof. Dr. David Reck on Thirugokarnam Ramachandra Iyer), டாக்டர் பியா ஸ்ரீநிவாசன் (Dr. Pia Srinivasan-“Music Fur Vina-Rajeswari Padmanabhan & Karaikudi S. Subramanian) ப்ரொஃபஸர் டாக்டர் ரிசார்ட் வுல்ஃப் (Prof. Dr. Richard Wolf-Ranganayaki Rajagopalan), டாக்டர் நியன் ஹயூஸ் (Dr. Nijen Huis- Rajeswari Padmanabhan, Karaikudi Subramanian, Karpakam Swaminathan, R.S. Jayalakshmi) முதலியோர்.

வீணைக்கு எப்படி உலக அளவில் இந்த அளவு பெருமை கிடைத்தது?

நம் கலாசாரத்தில் தொன்று தொட்டு முழுமையாக இணைந்திருந்து, யாழ் என்னும் நிலையிலிருந்து வளர்ந்து, நம் கோயில்களிலும், இலக்கிய இலக்கணங்களிலும் இடம் பெற்று, முதிர்ச்சியடந்து கொண்டிருந்த நிலையில் பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னருக்கு மந்திரியாய் இருந்த கோவிந்த தீக்ஷிதரே இப்போதிருக்கும் ஸரஸ்வதி வீணையை அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்தார்.

என் சிறப்பு

பெருமையுடன் வளர்ந்த எனக்கு இன்று என் சிறப்பு எனக்கே மறக்கும் அளவுக்கு மயக்கத்துடன் உலவுகிறேன் என்றே நினைக்கிறேன். நான் வெகு காலம் அனுபவித்திருந்த புனிதத்தைக் காப்பாற்றச் சிரமப்படுகிறேன் என்று தெரிகிறது. நாதத்தின் நுணுக்கத்தை, கேட்பதின் மகிமையைப் பிறருக்கு உணர்த்தப் பிறந்த நான் இன்று ஆசையின் அமளியில், ஒசையின் அட்டகாசத்தில் அடங்கிப் போயிருக்கிறேன் என்று உணர்கிறேன். என் சிறப்புதான் என்ன? நான் சிந்தனை செய்கிறேன். கூற முயல்கிறேன்.

 

என் உயிர் நாதம்

துல்லியமான நாதம். அமைதியில் பிறந்த நாதம். அழகான நாதம். குறைவில்லாத நாதம், அருமையான நாதம்…., என்னைச் சிதைக்காதிருந்தால்! சொல்லப்போனால் நானும் நீயும் ஒன்றுதான். உனக்கும் எனக்கும் முக்கியமாக 24 முதுகெலும்புகள் உண்டு. “நாத தனும்”.


நீங்கள் அதற்கு ‘மெட்டு’ என்று பெயர் கொடுத்திருக்கிறீர்கள், நினைவிருந்தால்!. அதைச் சரியாக வைத்திருந்தால் என் உயிர் என்னிடம். நானும் மகிழ்வேன். மற்றவரையும் மகிழ்விப்பேன். உன்தலைக்குள் எண்ணமுடியாத அலைகள். அதைச்சீராக வைத்திருந்தால் நீயே சங்கீதம், உன் வாழ்வே சங்கீதம். என் தலையிலிருந்து கிளம்பும் நாத அலைகளைச் சீராக்கினால் பக்தி பெருகி. உலகே மயங்கும், அன்பு கசிந்து உள்ளம் உருகும். நான் நினைப்பேன். நீ ஏன் வாழ்க்கையை நாத மயமாக்கக்கூடாது என்று. நீ என்னிடம் வா. நாம் சேர்ந்து நாதமயமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்போம். என்னுள் புதைந்திருக்கும் உயிர் நாதம் சுலபமாக உன்னைத் தழுவும். உன்னுள் எழும்பும் எண்ண அலைகள் தறி தெரிக்க ஓடுகிற வாய்ப்பு நிறைய உண்டு. என் சக்தி உன்னை அடக்கும். என் சக்தி உன்னைப் பண்படுத்தி ஆக்க வேலைகளில் புகுத்தும்.

ஆனால் நான் கொஞ்சம் பழமையானவன். நான் சொல்வதை நீ கேட்கவா போகிறாய்? உனக்கு நான் நிறைய வேலை கொடுப்பேன். என்னுள் எழும்பும் இனிமையான நாதத்தை ஆழ்ந்து மணிக்கணக்கில் கேட்கச்சொல்வேன். உனக்குப் பிடிக்கவா போகிறது? உனக்கு நேரமா இருக்கப்போகிறது? நீ ஜெட் யுகத்தையல்லவோ சேர்ந்தவன்? எது சீக்கிரமோ எது சுலபமோ அது வேண்டும் உனக்கு. எல்லாம் உனக்குக் கிடைத்துவிடும் என்று நினக்கிறாய். ஆனால் நிலைக்காது. எதையோ ஒன்றை நீ இழக்கிறாய் என்று எனக்குத் தெரியும். எப்படிச்சொல்வேன்? ஆனாலும் சொல்கிறேன்.

என்னை உன் உடம்பாக்கினால் உனக்குப் புத்துயிர் கிடைக்கும். உன் குரல் கிளப்பும் நாதம் எனக்கு இணையாக கேட்பவரை ஆனந்தத்தில் ஆழ்த்தும். ஏழு ஆதாரம், யோக நிலை, இருபத்தைந்து துல்லியமான ஸ்தான நிலைகளின் சூக்ஷ்மம், தத்துவங்கள், தனக்குள்ளேயே மறைந்திருக்கும், நமக்காகக் காத்திருக்கும், நமக்கு வழிகாட்ட இருக்கும் ஸ்வரங்கள் (ஸ்வயம்பூ), அசையும் அசையாத் தத்துவங்கள் (22 ஸ்ருதிகளும், அதற்கும் மேலும்) மேலும் உன் குரலுக்கு இணயான தெய்வீக மென்மை, ஆழம், அழகுப்பட்சிகளின் குரல் இனிமையையொத்த, சொற்கள், பேச்சு, மற்றும் இப்பிரபஞ்ச ஒலி, பிருஹத்வனியை உன்னிலிருந்து வெளிக் கொணர்ந்து கேட்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

 

என் சிரிப்பு

இதை நினைத்தே நான் சிரிக்கிறேன். இதோ இருக்கிறேன். கண்ணுக்குத் தெரியவில்லையே ஏன்? ஏன் என்னை வருடத்திற்கு ஒரு முறை பூஜை செய்வதற்கு மட்டுமே என்று நினத்துவிட்டார்களா? சிலசமயம், வேதனையாயிருக்கிறது. ஆனால் உடனே அது மறைந்து என்னுள் அமைதி நிலவுகிறது. எனக்குப் புரிகிறது, அவர்களுக்கு நேரம் இல்லை, நேரம் வரவில்லை! எல்லாவகையிலும் ஆத்ம சோதனைக்கு உட்படுத்தி நம்மைத் திருத்தி நேர்வழி செலுத்த உதவும் ஓர் அற்புத வாத்தியம்.

 

என்னை அறிந்தால்

நான் உனக்குச் சொல்வேன்: “என்னை அறிய நீ முன்வந்தால், உன்னை அறிய நீ முதற் படி வைப்பாய்”. சங்கீத சூக்ஷ்மங்கள் உனக்குச் சுலபமாகும். எல்லாம் உன் கைவசமாகும். பிரபஞ்சத்தின் நாத அலைகள் உன்னைத் தழுவும். வேறுபாடு மறையும். ஆனந்தம் பொங்கும்.

bottom of page